நிதி ஆயோக் வெளியிட்டது: சுகாதார தரவரிசை பட்டியலில் கேரளாவுக்கு முதல் இடம் - தமிழகம் இந்த ஆண்டு பின்தங்கியது

சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3-வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது.

Update: 2019-06-25 10:52 GMT
புதுடெல்லி,

நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார தரவரிசை பட்டியலில் கேரளாவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. கடைசி இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது.

நிதி ஆயோக் அமைப்பு, தனது இரண்டாவது சுற்று சுகாதார தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

2015-16-ஐ அடிப்படை ஆண்டாக கொண்டு, 2017-18 குறிப்பு ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் வைத்து, நிதி ஆயோக் ஆராய்ந்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது.

பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள். யூனியன் பிரதேசங்கள் என 3 பிரிவுகளில் சுகாதார செயல் திறன் அடிப்படையில் நிதி ஆயோக் தரவரிசை படுத்தி உள்ளது.

இதில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் சிறந்த மாநிலங்களில் முதல் இடத்தை கேரளா பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஆந்திராவுக்கும், மூன்றாவது இடம் மராட்டிய மாநிலத்துக்கும் கிடைத்துள்ளது.

4-வது இடம் குஜராத்துக்கும், 5-வது இடம் பஞ்சாப்புக்கும், 6-வது இடம் இமாசல பிரதேசத்துக்கும் கிடைத்துள்ளது.

சுகாதாரத்தில் மிக மோசமாக உள்ள மாநிலம் உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா மாநிலங்கள் ஆகும்.

பெரிய மாநிலங்களில் வருடாந்திர செயல் திறன் அதிகரிப்பில் அரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

சிறிய மாநிலங்களில் மிசோரம் முதல் இடம்.

யூனியன் பிரதேசங்களில் சண்டிகாருக்கு முதல் இடம்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான தரவரிசை பட்டியலில் பெரிய மாநிலங்களில் கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு முன்னணி இடங்களை கைப்பற்றி இருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்