எம்எல்ஏக்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்த முடியாது - கர்நாடக சபாநாயகர்

எம்எல்ஏக்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்த முடியாது என கர்நாடக சபாநாயகர் மேல்முறையீடு செய்து உள்ளார்.

Update: 2019-07-11 09:01 GMT
புதுடெல்லி,

கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனால் அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்து விட்டதால் குமாரசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அவர்களை பாரதீய ஜனதா ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

ஆனால் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக வீட்டு வசதி துறை மந்திரியாக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகினார்கள். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இதனால் பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது.

 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தங்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க மறுத்தது சட்ட விரோதமானது என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறி உள்ளனர்.   இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்பது பற்றி சபாநாயகர் இன்றே முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்குமாறு சுப்ரீம் கோர்ட் தனக்கு அறிவுறுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்  வழக்கு தொடர்ந்து உள்ளார்.  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சபாநாயகரின்  கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. நாளை இந்த  மனு விசாரிக்கப்படும்  என கூறி உள்ளது.

மேலும் செய்திகள்