சிறப்பு அந்தஸ்து ரத்து: டுவிட்டரில் டிரெண்டான காஷ்மீர் விவகாரம்

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட காஷ்மீர் விவகாரம் நேற்று டுவிட்டரில் டிரெண்டானது.

Update: 2019-08-05 22:09 GMT
புதுடெல்லி,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத்தளமான டுவிட்டரில் நேற்று டிரெண்டானது. அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்தும், எதிர்த்தும் டுவிட்டர்வாசிகள் கருத்துகளை பகிர்ந்தனர்.

குறிப்பாக மத்திய அரசின் முடிவு ‘வரலாற்று சிறப்புமிக்கது’ எனவும், ‘உண்மையான வெற்றி’ என்றும் வலைத்தள ஆர்வலர்கள் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். அரசின் நடவடிக்கை மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் தற்போது மாறி இருப்பதாக, எங்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் மகிழ்ச்சி வெளியிட்டு இருந்தனர்.

இதைப்போல ‘அகண்ட பாரதம்’ என்ற தலைப்பில், மூவர்ண கொடியுடன் இணைந்த தங்கள் புகைப்படங்களை பலரும் பகிர்ந்ததுடன், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு முன்கூட்டியே வாழ்த்தும் தெரிவித்து இருந்தனர். இதனால் மோடி, அமித்ஷா ஆகியோரின் பெயர்களும் நேற்று டிரெண்டானது.

அதேநேரம் அரசின் நடவடிக்கைக்கு, குறிப்பாக காஷ்மீரில் ஊரடங்கு, தலைவர்களுக்கு வீட்டுக்காவல், கல்வி நிறுவனங்கள் மூடல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். காஷ்மீர் மக்கள் அனைவரும் நமது சகோதர-சகோதரிகள் எனவும், இந்த நேரத்தில் அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்பது போன்ற பதிவுகளும் காணப்பட்டன.

மேலும் செய்திகள்