போராட்டத்தின் போது பயிற்சி டாக்டரை கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

Update: 2019-08-08 08:18 GMT
விஜயவாடா

நெக்ஸ்ட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பயிற்சி மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விஜயவாடாவிலும் பயிற்சி மருத்துவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், அதனைச் சீர் செய்வதற்காக போராட்டம் நடத்திய பயிற்சி மருத்துவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டு கொண்டனர்.

அதனை ஏற்க மறுத்த மருத்துவ மாணவர்கள், அங்கு வந்த விஜயவாடா நகர காவல் துணை ஆணையர் ஹர்ஷவர்த்தனனுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆவேசம் அடைந்த ஹர்ஷவர்த்தன் பயிற்சி மருத்துவர் ஒருவரை சட்டை காலரை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய பயிற்சி மருத்துவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களை தரதரவென இழுத்துச் சென்ற போலீசார் 25 பேரை கைது செய்தனர். இந்நிலையில் பயிற்சி மருத்துவர்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு திருப்பதி மலை அடிவாரத்திலும் அலிபிரி அருகே ஆந்திராவின் மற்ற நகரங்களிலும் பயிற்சி மருத்துவர்கள் தீவிர போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்