காஷ்மீர் விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை; கார்த்தி சிதம்பரம்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விவகாரத்தினை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2019-08-22 01:37 GMT
சென்னை,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது.

இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்காக டெல்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

இந்த நிலையில், தேடப்படும் நபர் என்ற வகையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. சார்பிலும், அமலாக்கப்பிரிவு சார்பிலும் ‘லுக் அவுட்’ எனப்படும் தேடுதல் நோட்டீஸ் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி அவரது வக்கீல்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் நீதிபதி அதை ஏற்க மறுத்துவிட்டார். முன்ஜாமீன் மனு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார்? என்று தெரியாமல் இருந்த நிலையில், நேற்று இரவு 8.30 மணி அளவில் அவர் திடீரென்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் கபில் சிபல் உள்ளிட்ட அவரது வக்கீல்களும் வந்து இருந்தனர்.

ப.சிதம்பரம் திடீரென்று பேட்டி அளிப்பதை அறிந்ததும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அங்கு வந்து, காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே காத்து இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் உள்ளே செல்லவில்லை.

பேட்டி முடிந்ததும், ப.சிதம்பரம் தனது வக்கீல்களுடன் ஜோர் பாக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

அதன்பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் கார்களில் ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் சென்ற போது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டி இருந்தது. கதவை திறக்குமாறு கூறியும், நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், இனி காத்து இருப்பதில் அர்த்தம் இல்லை என்று கருதிய சி.பி.ஐ. அதிகாரிகள் காம்பவுண்டு சுவரில் ஏறி உள்ளே குதித்து வீட்டுக்குள் சென்றனர்.

உள்ளே சென்ற அதிகாரிகள் ப.சிதம்பரத்துடன் சுமார் 30 நிமிடம் பேசினார்கள். அதன்பிறகு அவரை கைது செய்து வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட தகவலை சி.பி.ஐ. மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

இதுபற்றி ப. சிதம்பரத்தின் மகன் மற்றும் மக்களவை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மேல்மட்டத்தினருக்கு வளைந்து கொடுக்கும் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றிலும் பழிவாங்கும் மற்றும் கீழ்த்தர செயல்.

அரசியல் பழிவாங்கும் செயலாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  இதற்கு எந்த அவசியமும் கிடையாது.  காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் நிதி மற்றும் உள்துறை மந்திரியின் தோற்றத்தினை சீர்குலைக்கவும் மற்றும் தொலைக்காட்சியில் பரபரப்பு ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் அவருக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.  அரசியல் ரீதியாக மற்றும் சட்டபூர்வ முறையில் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம் என்று கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கம் பற்றிய விவகாரத்தினை திசை திருப்பவே கைது நடவடிக்கை நடந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்