அஜித் பவார் மீதான விசாரணைக்கு தடை இல்லை - கூட்டுறவு வங்கி ஊழலில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் மீதான விசாரணைக்கு தடை இல்லை என கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-09-02 21:49 GMT
புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் கூட்டுறவு வங்கிகளின் சொத்து விற்பனை, கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது.

இந்த ஊழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி அஜித் பவார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஷா ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. முடிவில் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி, அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த ஊழல், மிகப்பெரிய தொகை தொடர்பானது என்பதால், விசாரணையை நிறுத்த முடியாது என அறிவித்தனர்.

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்