போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிப்பு - போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்

சொத்து பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளித்தனர்.

Update: 2019-09-07 19:54 GMT
மதுரா,

உத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்தவர் ஜோகிந்தர். அவரது மனைவி சந்திரவதி. இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் தங்களுக்கு விட்டுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, அதில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டனர். இதுகுறித்து அந்த தம்பதியினர் சூரிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த தம்பதியினர் சூரிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி ஜோகிந்தர் பலியானார். அவரது மனைவி தீக்காயம் அடைந்து டெல்லி ஐப்தர்சங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து 3 போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்ய மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சந்திரவதிக்கு 3 போலீசார் ரத்தம் கொடுத்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்