தேசிய செய்திகள்
‘சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் போலியானது’ - கேந்திரிய வித்யாலயா விளக்கம்

சர்ச்சைக்குரிய கேள்வித்தாள் போலியானது என்று கேந்திரிய வித்யாலயா விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,

சமூக வலைத்தளங்களில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாள் ஒன்று தற்போது வைரலாக பரவி தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அதில் இடம்பெற்றுள்ள சரியான விடையை தேர்ந்தெடுக்கும் கேள்வி ஒன்று, ‘தலித் பிரிவினர் என்றால் தீண்டத்தகாதவர்கள்’ என்பது போன்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் முஸ்லிம்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்று இருந்த இந்த வினாத்தாள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது எனவும் தகவல் வெளியானது. இது அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கேள்வித்தாள் போலியானது என கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் கூறியுள்ளது. இந்த வினாத்தாள் தொடர்பான எந்த ஆதாரமும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை எனவும், இது கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள் என தவறுதலாக கூறப்பட்டு இருக்கலாம் எனவும் விளக்கம் அளித்து உள்ளது.

இதைப்போல இந்த கேள்வித்தாள் இடைத்தேர்வுக்காக தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் எனக்கூறியுள்ள சி.பி.எஸ்.இ. நிர்வாகம், எந்த பள்ளிக்கும், எந்த வகுப்புக்கும் இடைத்தேர்வுக்கான வினாத்தாளை நாங்கள் தயாரிப்பதில்லை என்றும், பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாளை மட்டுமே தயாரிப்போம் எனவும் தெரிவித்து உள்ளது.