ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி

ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-10-15 10:06 GMT
அமராவதி,

ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த பேருந்து ராஜமுந்திரியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள மரேடுமிலி என்ற சுற்றுலா பகுதியில் இருந்து சத்தீஷ்கார் எல்லையான சிந்தூரு நோக்கி சென்றுள்ளது.  பேருந்தில் 25 பயணிகள் வரை பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.  3 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.  காயமடைந்த பலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

சமீபத்தில் பெய்த கனமழையால் சாலைகள் மோசமடைந்து இருந்தன.  சம்பவத்தன்றும் மழை பெய்து கொண்டு இருந்தது.  அடர் வனப்பகுதி என்பதனால் வானிலை தெளிவற்று காணப்பட்டது.

அதிவேக பயணம் அல்லது பிரேக் செயலிழத்தல் ஆகியவற்றில் எதனால் பேருந்து விபத்திற்குள்ளானது? என உறுதிப்படுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.  மூத்த காவல் துறை அதிகாரிகள் விபத்து பகுதிக்கு சென்று உள்ளூர்வாசிகளுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்