அடுக்குமாடியில் பயங்கரம்: 21 வயது மாணவியை கத்தியால் குத்தி விட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன்

உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 21 வயது மாணவியை கத்தியால் குத்திவிட்டு 8-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன் உயிரிழந்தான்.

Update: 2019-10-18 07:57 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 61-வது செக்டாரில்  உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பி.டெக் மாணவி (வயது 21) வசித்து வருகிறார். இவரது வீடு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 8-வது மாடியில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் மாணவி தனியாக இருந்துள்ளார். மாணவியின் பெற்றோர் வெளியில் சென்று இருந்தநிலையில் அதே குடியிருப்பில் வசித்து வரும் 15 வயது சிறுவன் மாணவியின் வீட்டுக்கு  சென்றுள்ளான். மாணவியை பார்த்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாறியாக குத்தினான். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி வலியால் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மாணவியை ஒரு அறைக்குள் தள்ளி கதவை தாளிட்டு விட்டு மற்றொரு அறைக்குள் புகுந்து கொண்டு கதவை தாளிட்டுகொண்டான். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மற்றொரு அறைக்குள் தாளிட்டு இருந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் தேடினர். சிறுவன் அங்கு இல்லை. பின்னர் அவன் 8-வது மாடியில் இருந்து குடியிருப்பின் பின் பகுதியில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அவன் பயத்தில் மேலிருந்து குதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்குத் அக்கம் பக்கத்தினர் தூக்கிச் சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

எதற்காக சிறுவன் மாணவியை தாக்கினான் என்பது பற்றி அந்த  மாணவியிடமும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்