மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணையை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-11-08 22:00 GMT
புதுடெல்லி,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து, அதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது.

அந்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தது. மேலும் இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படியும் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் மேகதாது பகுதியில் புதிய அணைக்கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடக அரசு தரப்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்தநிலையில், நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரியதை ஏற்றுக் கொண்டு, விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்