அயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்ளிட்ட மொழி நூல்களின் குறிப்புகள்

அயோத்தி வழக்கு தீர்ப்பில் சமஸ்கிருதம், உருது உள்பட பல்வேறு மொழி நூல்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Update: 2019-11-10 22:00 GMT
புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிக்க 5 நீதிபதிகளும் 333 ஆவண குறிப்புகளை ஆய்வு செய்துள்ளனர். இவற்றில், மத நூல்கள், வெளிநாட்டவரின் பயண குறிப்புகள், தொல்லியல் அறிக்கைகள், பாபர் மசூதி இடிப்புக்கு முன்பு, சர்ச்சைக்குரிய இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

மேலும், தங்கள் தீர்ப்பில், சமஸ்கிருதம், இந்தி, உருது, பாரசீகம், துருக்கிஷ், ஆகிய மொழிகளில் வெளியான வரலாறு, கலாசாரம், தொல்லியல், மதம் தொடர்பான நூல்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

மொகலாய பேரரசர் அக்பர் அவையில் இடம்பெற்ற அபுல் பாசல் எழுதிய ‘அயினி அக்பரி’ என்ற நூலின் மொழிபெயர்ப்பை தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

பாபர் மசூதி இருந்த இடம்தான், ராமர் பிறந்த இடம் என்ற இந்துக்களின் நம்பிக்கை, வால்மீகி ராமாயணம், ஸ்கந்த புராணம் போன்ற இதிகாசங்கள், மத நூல்களின் அடிப்படையில் அமைந்தது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

அதுபற்றி தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இயற்றப்பட்ட வால்மீகி ராமாயணம், ராமரின் பிறப்பு மற்றும் அவரது செயல்கள் குறித்து அறிய முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. வால்மீகி ராமாயணத்தில் வரும் ஸ்லோகங்கள், அயோத்தியில் ராமர் பிறந்ததை குறிக்கின்றன.

ராமர், தெய்வாம்சங்களுடன் இருந்ததாகவும், அவர் ஒட்டுமொத்த உலகத்துக்கும் கடவுள் என்றும், அவரது பிறப்பால் அயோத்தி ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், தசரதரின் அரண்மனையில் ராமர் பிறந்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதே தவிர, குறிப்பாக எந்த இடத்தில் பிறந்தார் என்று கூறப்படவில்லை.

கடந்த 1949-ம் ஆண்டு, பாபர் மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்டதும், சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தப்பட்டதும்தான் அயோத்தி வழக்குக்கு காரணமாக அமைந்தது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்