தேசியவாத காங்கிரசுக்கு இரவு வரை அவகாசம் தந்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் அறிக்கை அளித்தது எப்படி?

தேசியவாத காங்கிரசுக்கு இரவு வரை அவகாசம் தந்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் அறிக்கை அளித்தது எப்படி என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-11-12 23:15 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள் ஆட்சி அமைக்க இயலாமல் போனது. இந்த நிலையில், 54 இடங்களில் வென்று 3-வது பெரிய கட்சியாக உருவான சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி வாய்ப்பு அளித்தார். அத்துடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து தெரிவிக்க நேற்று இரவு 8.30 மணி வரை அவகாசம் அளித்திருந்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே, மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய உள்துறைக்கு கவர்னர் அறிக்கை அளித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை அவசரமாக கூடி, கவர்னரின் அறிக்கையை ஏற்று ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அதை ஏற்று கையெழுத்திட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார்.

இரவு 8.30 மணி வரை தேசியவாத காங்கிரசுக்கு அவகாசம் வழங்கிய கவர்னர், அதற்கு முன்பாகவே மத்திய உள்துறைக்கு அறிக்கை அளித்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னணிதான் என்ன என்ற கேள்வியும் எழுந்தது.

நேற்று காலை 11.30 மணிக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில் மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து தெரிவிக்க 48 மணி நேரம் அவகாசம் கேட்கப்பட்டது.

அது மட்டுமின்றி மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் நிருபர்களை சந்தித்து, “காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் புதிய அரசை அமைக்க இயலாது. அவர்கள் இன்னும் ஆதரவு கடிதம் அளிக்கவில்லை” என கூறினார்.

இந்த நிலையில் 48 மணி நேரம் அவகாசம் கேட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார். அத்துடன் இரவு 8.30 மணி வரை அந்த கட்சிக்கு அவகாசம் வழங்கியதை ரத்து செய்தார்.

அதைத் தொடர்ந்துதான் எந்தவொரு கட்சியும் மாநிலத்தில் உடனடியாக ஆட்சி அமைக்கும் நிலை இல்லை என்பதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய உள்துறைக்கு கவர்னர் அறிக்கை அளித்தார். அதன்பின்னர் மத்திய மந்திரிசபை கூடி, கவர்னரின் அறிக்கையை ஏற்று, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. ஜனாதிபதியும் உடனடியாக ஏற்று மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்