டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை

டெல்லியில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

Update: 2019-11-16 12:52 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 18ந்தேதி தொடங்கி டிசம்பர் 13ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதுதொடர்பான தகவல் இரு அவைகளின் செயலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது என நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் எடுத்து கொள்ளப்பட உள்ளன.  சட்ட வடிவம் பெறுவதற்கான இரு அவசர சட்டங்கள் இந்த கூட்டத்தொடருக்கான பட்டியலில் உள்ளன.

இவற்றில் ஒன்று, 2019ம் ஆண்டு நிதி சட்டம், 1961ம் ஆண்டு வருமானவரி சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில், பொருளாதார மந்தநிலையை குறைத்து வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக புதிய மற்றும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதத்தினை குறைப்பது என்ற அவசர சட்டம் ஆகும்.

இதேபோன்று மற்றொன்று, இ-சிகரெட்டுகள் மற்றும் அதுபோன்ற பொருட்களின் விற்பனை, தயாரிப்பு மற்றும் சேமித்து வைத்தல் ஆகியவற்றை தடை செய்ய வழிவகுக்கும் அவசர சட்டம் ஆகும்.  இந்த இரு அவசர சட்டங்களும் கடந்த செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த கூட்டம் சுமுகமுடன் நடைபெறவும், சபை நடவடிக்கைகளை அமளியின்றி நடத்துவதற்காகவும், டெல்லியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோதி மற்றும் பிற தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்களை குறிப்பிட்டு அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்வது மரபு. அந்த வகையில், சபை அமளி இன்றி சுமுகமாக நடைபெறவும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கிறார்.  இதற்காக டெல்லியில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.

மேலும் செய்திகள்