கேரள சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தம்

கேரள சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த 12 வயது சிறுமி தடுத்து நிறுத்தப்பட்டார்.

Update: 2019-11-19 08:29 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலைக்கு சாமி அய்யப்பனை தரிசிக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக நடுத்தர வயதுடைய பெண்கள் சன்னிதானத்துக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க முடியாது என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அய்யப்பன் கோவிலின் நடை கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் ரூ.3.30 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளது.  கோவிலின் நடை திறந்ததில்  இருந்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் தரிசனம்  செய்துள்ளனர்.

இதனிடையே ஆந்திராவிலிருந்து வந்த பக்தர்களின் வாகனத்தை நிலக்கல் பகுதியில் சோதனையிட்ட போலீசார், அதிலிருந்த 2 பெண்களின் வயது குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

அதில் ஒருவர் 30 வயதுடையவர் என்பதும், மற்றொரு பெண் 40 வயதுடையவர் என்பதும் தெரிய வந்ததையடுத்து அவர்களிருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதேபோன்று கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஒரு சிறுமியிடம் கோவில் அதிகாரிகள், வயது சான்று பற்றிய சோதனையில் ஈடுபட்டனர்.  இதில், அந்த சிறுமிக்கு 12 வயது என தெரிய வந்தது.  இதனால் சிறுமி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.  அந்த சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

மேலும் செய்திகள்