குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக நித்யானந்தா மீது வழக்கு

குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-11-20 22:15 GMT
ஆமதாபாத்,

குழந்தைகளை கடத்திச்சென்று, சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக நித்யானந்தா சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே வழக்கில் அவரது பெண் சீடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் நித்யானந்தா சாமியார் (வயது 41). தமிழ்நாட்டின் திருவண்ணாமலையை சேர்ந்த இவர், பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலும் ஒரு கிளை செயல்பட்டு வருகிறது.

இந்த கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து 4 குழந்தைகளை தங்க வைத்து, அவர்களை குழந்தை தொழிலாளர்கள் ஆக்கி, ஆசிரமத்துக்காக நன்கொடை வசூலிக்க வைத்து சித்ரவதை செய்வதாக ஒரு புகார் எழுந்துள்ளது.

இந்த புகாரின்மீது நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆமதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பெண் சீடர்கள் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அங்கு அதிரடி சோதனை நடத்தி 4 குழந்தைகளையும் போலீசார் மீட்டனர்.

போலீசாரிடம் அந்த குழந்தைகள் தங்களை 10 நாட்களுக்கு மேலாக அந்த வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும், வேலைகள் செய்ய வைத்ததாகவும் புகார் கூறினர்.

4 குழந்தைகளில் முறையே 9, 10 வயதான 2 குழந்தைகள், உள்ளூர் குழந்தைகள் நல கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த கமிட்டி அவர்களிடம் விசாரித்து, பெற்றோரிடம் ஒப்படைக்கும்.

மீதி 2 குழந்தைகள், கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர்.

இந்த குழந்தைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த ஜனார்த்தன சர்மா, தனது 4 மகள்களை 2013-ம் ஆண்டு பிடதி ஆசிரமம் சார்பில் நடத்தப்பட்டு வருகிற கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார்.

அதன்பின்னர் ஜனார்த்தன சர்மாவுக்கு எந்த தகவலும் கொடுக்காமலேயே ஆமதாபாத் கிளைக்கு மாற்றி விட்டனர்.

இதுபற்றி அறிந்த ஜனார்த்தன சர்மா, மகள்களை பார்க்க சென்றார். அப்போதுதான் அவருக்கு வளர்ந்து வரும் குழந்தைகளான 2 மகள்கள், அடுக்கு மாடி குடியிருப்பில் அடைத்து வைக்கப்பட்டதும், வளர்ந்து விட்ட 2 மகள்கள் லோகமுத்ரா சர்மா (21), நந்திதா சர்மா (18) ஆகியோரை ஆசிரமத்தில் வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இளைய மகள்கள் 2 பேரும் போலீசாரால் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட நிலையில், மூத்த மகள்கள் 2 பேரையும் பார்க்க ஜனார்த்தன சர்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தனது மூத்த மகள்கள் லோகமுத்ரா சர்மாவையும், நந்திதா சர்மாவையும் கடத்திச்சென்று ஆசிரமத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக குஜராத் ஐகோர்ட்டில் ஜனார்த்தன சர்மா வழக்கு தொடுத்தார்.

தனது மகள்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கேட்டிருக்கிறார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையே, “ நாங்கள் ஆசிரமத்தில் எங்கள் விருப்பத்தின்பேரில்தான் இருக்கிறோம். அங்குதான் இருக்க விரும்புகிறோம், தேவைப்படும்போது கோர்ட்டில் நாங்களே நேரில் ஆஜர் ஆவோம்” என மகள்கள் லோகமுத்ரா சர்மாவும், நந்திதா சர்மாவும் ஒரு வீடியோ செய்தியை விடுத்து உள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ, அவர்களை மீட்க போராடுகிற தந்தை ஜனார்த்தன சர்மாவின் தலையில் இடியை இறக்கி உள்ளது.

மேலும் செய்திகள்