பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அமளி

பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முடிவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

Update: 2019-11-21 23:45 GMT
புதுடெல்லி,

பாரத் பெட்ரோலியம், இந்திய கப்பல் கழகம், இந்திய சரக்கு பெட்டக கழகம் உள்பட 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மக்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிடத் தொடங்கினர்.

பங்கு விற்பனை மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதையும் எதிர்த்து கோஷமிட்டனர்.

சபாநாயகர் வேண்டுகோள்

அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்களை பார்த்து, “நான் புதிய உறுப்பினர். நீங்களோ மூத்தவர்கள். சபையின் கண்ணியத்தை காக்க வேண்டியது அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பு. சபையின் மையப்பகுதியில் இருந்தபடி, சபாநாயகரிடம் பேசாதீர்கள். கேள்வி நேரம் முக்கியமானது. அதை சீர்குலைக்கக்கூடாது. காங்கிரஸ் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்காதது உண்மைதான். ஆனால், பூஜ்ய நேரத்தில் பேச அனுமதிக்கிறேன்” என்று கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், 15 நிமிடங்களாக கோஷமிட்ட நிலையில், தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினர்.

நாடு கொள்ளை

அப்போது, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “நீங்கள் புதியவர் அல்ல. சபாநாயகர். உங்களுக்கு நாங்கள் ஒத்துழைக் கிறோம். நீங்களும் அதற்கேற்ப நடந்து கொள்கிறீர்கள்.

இப்போது மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. நாடு கொள்ளை அடிக்கப்படுகிறது. ஆகவேதான் நோட்டீஸ் கொடுத்தோம்” என்றார்.

அவருக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி பதில் அளிக்கையில், “பிரதமர் மோடி, தூய்மையான அரசை நடத்தி வருகிறது. இந்த அரசில் ஊழல் எதுவும் கிடையாது. நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகிறீர்கள். அதை ஏற்க முடியாது” என்று கூறினார்.

மென்மையானவர்

அதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்தபோது, நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் என்று பல நாட்களாக அவையை முடக்கியது” என்று சுட்டிக்காட்டினார்.

பிரகலாத் ஜோஷி, “அந்த நேரத்தில் அந்த ஊழல் வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டிலோ அல்லது தலைமை கணக்கு அதிகாரி ஆய்விலோ இருந்தன” என்று பதில் அளித்தார்.

அப்போது, சபாநாயகர் அளித்த உத்தரவாதத்தால் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைதி அடைந்தனர். உடனே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “சபாநாயகர் மென்மையானவர், பிரகலாத் ஜோஷிதான் கடுமையாக நடந்து கொள்கிறார்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்