ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்க இருக்கும் 21-வயது இளைஞர்!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்று விரைவில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

Update: 2019-11-22 03:09 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 21 வயதான மயங்க் பிரதாப் சிங், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்து, ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து, விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, அவருக்கு கிடைக்கவுள்ளது.

இது குறித்து மயங்க் பிரதாப் சிங் கூறிய போது, “நீதிபதிகளுக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கண்டு நீதித்துறை சேவை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனால் தான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன்.

இந்த தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற எனக்கு உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது. இதனை ராஜஸ்தான் அரசாங்கம் இந்த ஆண்டு முதல் 21 வயதாக குறைத்தது.

இதன் காரணமாகவே தன்னால் இந்த தேர்வை எழுத முடிந்ததாகவும், இதன் மூலம் தனக்கு இளம் வயதில் நிறைய கற்றுகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மயாங்க் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்