மெட்ரோ வழித்தடத்திற்காக மரங்களை வெட்ட மராட்டிய மாநில அரசுக்கு இரண்டு வாரம் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு

மெட்ரோ வழித்தடத்திற்காக மரங்களை வெட்ட மராட்டிய மாநில அரசுக்கு இரண்டு வாரம் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-02 12:59 GMT
புதுடெல்லி,

மும்பையில் உள்ள வதலா பகுதியில் இருந்து தானேவில் உள்ள காசர்வடவலி பகுதிக்கு மெட்ரோ ரயில் சேவைக்கான நான்காம் வழித்தடம் அமைக்க, அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு மராட்டிய அரசாங்கம் முடிவெடுத்தது.

இதனை எதிர்த்து ரோகித் ஜோஷி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு மராட்டிய மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கு விசாரணையின் முடிவில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்காக மரங்களை வெட்ட மும்பை அரசாங்கத்திற்கும், மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்திற்கும் இரண்டு வாரம் தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் மும்பை ஆரே காலனியில் மெட்ரோ பணிமனை அமைக்க சுமார் 3 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதினர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆரே காலனி பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்