நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: ஐதராபாத்தில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை

ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேர், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Update: 2019-12-07 00:15 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகரான சாம்ஷாபாத்தை சேர்ந்தவர் 25 வயதான கால்நடை பெண் டாக்டர்.

அவர் கச்சிபோலியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கால்நடை உதவி டாக்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த மாதம் 27-ந்தேதி மாலை 5.50 மணிக்கு, தனது வீட்டில் இருந்து அவர் ஆஸ்பத்திரிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். வழியில், ஒரு சுங்கச்சாவடியில் அவரது வாகனம் ‘பஞ்சர்’ ஆனது.

அவருக்கு உதவுவது போல் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் லாரி டிரைவர்களான முகமது ஆரீப், சிந்தகுந்தா சென்னகேசவலு, லாரி கிளனர்கள் ஜொள்ளு நவீன், ஜொள்ளு சிவா ஆவர். 4 பேரும் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பெண் டாக்டருக்கு உதவுவது போல், அவரை ஒதுக்குப்புறமாக அழைத்துச்சென்றனர். அவரது வாயில் மதுவை ஊற்றி மயங்க வைத்தனர். பின்னர், 4 பேரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

கழுத்தை நெரித்துக் கொன்றனர். ஐதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஒரு பாலத்துக்கு அடியில் உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். மறுநாள் அதிகாலையில், பெண் டாக்டரை காணவில்லை என்று அவருடைய சகோதரி, சாம்ஷாபாத் போலீசில் புகார் கொடுத்தார். அதே நாள் காலை 9 மணியளவில், பாலத்துக்கு கீழே எரிந்த நிலையில் ஒரு உடல் கிடப்பதை ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பெண் டாக்டரின் குடும்பத்தினர் பார்த்து, அது அவரது உடல்தான் என்று அடையாளம் காட்டினர்.

இந்த கொடூர படுகொலை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சுங்கச் சாவடியில் இருந்த கண் காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில், 29-ந்தேதி, லாரி தொழிலாளர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

கோர்ட்டுக்கு 4 பேரும் அழைத்து வரப்பட்டபோது, போலீஸ் வாகனத்தை பொதுமக்கள் கல்வீசி தாக்கினர்.

கொலையாளிகளை தூக்கிலிட வேண்டும், அடித்துக்கொல்ல வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க் கள் ஆவேசமாக பேசினர்.

கொலை குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் காலதாமதம் செய்த 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விரைவாக விசாரிக்க விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவ் அறிவித்தார். அதன்படி, மெகபூப்நகரில் உள்ள முதலாவது கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டு, விரைவு கோர்ட்டாக மாற்றப்பட்டது.

இதற்கிடையே, சாத்நகர் கோர்ட்டு, போலீசார் மனுவை ஏற்று 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கடந்த 4-ந்தேதி அனுமதி அளித்தது. அதையடுத்து, 4 பேரையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வந்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, கொலை செய்தது எப்படி என்று குற்றவாளிகளை நடித்துக்காட்ட வைக்க திட்டமிட்டனர். அதற்காக நேற்று காலை 5.45 மணியளவில், 4 பேரையும் ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு 4 பேரும் பெண் டாக்டரை கொலை செய்தது பற்றி நடித்துக்காட்டினர். திடீரென 2 பேர் போலீசாரின் துப்பாக்கிகளை பறித்து அவர் களை நோக்கி சுடத்தொடங்கினர். கற்களாலும், கம்புகளாலும் தாக்கினர்.

எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சுதாரித்துக்கொண்டு, 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேரும் சுருண்டு விழுந்து இறந்தனர்.

இந்த என்கவுண்ட்டரில் 2 போலீசார் காயமடைந்தனர்.

சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையிலான போலீஸ் படை, 4 வாலிபர்களையும் என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தியது.

இந்த தகவல் பரவியவுடன், போலீசாருக்கு வாழ்த்துகள் குவிந்தன. முன்பு, போலீசாருக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், என்கவுண்ட்டருக்கு பிறகு பாராட்டுகள் குவிந்தன.

‘என்கவுண்ட்டர்’ நடந்த இடத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். 4 கொலையாளிகளில் ஒருவன், கையில் துப்பாக்கியுடன் இறந்து கிடந்தான். பெண் டாக்டர் உடல் கிடந்த இடத்தில் இருந்து 400 மீட்டர் தூரத்தில்தான் அவர்கள் உடல்கள் கிடந்தன. சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களின் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

‘என்கவுண்ட்டர்’ இடத்தில் குவிந்த பொதுமக்கள், போலீசார் மீது மலர்களை தூவி பாராட்டு தெரிவித்தனர். ‘தெலுங்கானா போலீஸ் ஜிந்தாபாத்’, ‘நீதி கிடைத்தது’ என்று கோஷமிட்டனர். போலீசாருக்கு சில பெண்கள் இனிப்பு வழங்கினர். அதுபோல், பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

‘தற்காப்புக்காக குற்றவாளிகளை சுட்டோம்’ - போலீஸ் கமிஷனர் விளக்கம்

தற்காப்புக்காக குற்றவாளிகளை சுட்டோம் என்று சைபராபாத் போலீஸ் கமிஷனர் விளக் கம் அளித்துள்ளனர்.



 



  தெலுங்கானா என்கவுண்ட்டர் தொடர்பாக சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கைதான 4 பேரிடம் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தியதில், ஏராளமான தகவல்கள் கிடைத்தன. பெண் டாக்டர் உடலை எரித்த பிறகு, அவரது செல்போன், கைக்கெடிகாரம், பவர் பேங்க் ஆகியவற்றை குற்றவாளிகள் மறைத்து விட்டனர். அவற்றை எடுப்பதற்காகவும், நடித்து காட்டச் சொல்வதற்காகவும் அதிகாலையில் அவர்களை சம்பவ இடத்துக்கு கூட்டிச்சென்றோம். அவர்களுக்கு கைவிலங்கு போடப்படவில்லை.

அப்போது, 10 போலீசார் அங்கு இருந்தனர். 4 பேரும் முதலில் நாங்கள் சொல்வதை செய்வது போல் பாசாங்கு செய்தனர். அவர்களில், முகமது ஆரீப் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் போலீஸ்காரர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பறித்து போலீசாரை நோக்கி சுட்டார். இன்னொருவரும் துப்பாக்கியை பறித்து சுட்டார்.

மற்றவர்கள் கற்களாலும், கட்டைகளாலும் எங்களை தாக்கினர். போலீசார் அந்த நிலையிலும் கட்டுப்பாடாக இருந்தனர். குற்றவாளிகளை சரண் அடைய சொன்னோம். ஆனால், அதை கேட்காமல், தொடர்ந்து தாக்கியதால், தற்காப்புக்காக நாங்கள் அவர் களை நோக்கி சுட்டோம். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இச்சம்பவத்தில், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும், ஒரு போலீஸ்காரரும் தலையில் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட 4 பேருக்கும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம். 4 பேர் என் கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தந்தை, சகோதரி மகிழ்ச்சி

கற்பழிப்பு குற்றவாளிகள் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதற்கு பெண் டாக்டரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தந்தை கூறியதாவது:-

4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டோம். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுமக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதற்காக தெலுங்கானா அரசுக்கும், போலீசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

பெண் டாக்டரின் சகோதரி கூறுகையில், “எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் என்கவுண்ட்டரை எதிர்பார்க்கவில்லை. கோர்ட்டு மூலம் தூக்கிலிடப்படுவார்கள் என்று கருதினோம். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்ய மற்றவர்கள் பயப்படும் நிலையை இது உருவாக்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்