டெல்லி தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Update: 2019-12-08 07:22 GMT
புதுடெல்லி,

டெல்லியில் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன.  மக்கள் நெருக்கடி அதிகம் நிறைந்த இந்த பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் இன்று அதிகாலை தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.  தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடந்தது.  அதிகாலை வேளையில் நடந்த இந்த தீ விபத்தில் சிக்கி 32 பேர் இறந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.  அவர்களில் பெருமளவிலானோர் புகையால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்துள்ளது.  காயமடைந்தோர் மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தீ விபத்து பற்றி அறிந்தவுடன் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சம்பவ பகுதிக்கு சென்றார்.  அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இது அதிக வருத்தம் அளிக்கும் சம்பவம்.  இதுபற்றி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.  காயமடைந்தோரின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசு ஏற்கும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்