சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயதினருக்கும் அனுமதி: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது.

Update: 2019-12-14 00:15 GMT
புதுடெல்லி,

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சென்று வழிபட அனுமதிக் கப்படுவது இல்லை.

நீண்ட காலமாக இருந்து வரும் இந்த நடைமுறைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட அனுமதி வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு சென்ற சில பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை 7 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றி, கடந்த மாதம் 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு நீடிக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

அதன்பிறகும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பெண்கள் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு 2-வது முறையாக செல்ல விரும்பிய பிந்து அம்மிணி என்ற பெண் அதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடந்த மாதம் 26-ந் தேதி எர்ணாகுளம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றபோது பக்தர்களால் தாக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, சபரிமலை கோவிலுக்கு செல்ல தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். இதேபோல் பாத்திமா என்ற பெண்ணும், அங்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

இருவரின் சார்பிலும் வக்கீல்கள் கடந்த 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு ஆஜராகி அந்த மனுக்களை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர்.

அதன்படி பிந்து அம்மிணி, பாத்திமா ஆகியோரின் மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் காலின் கான்ஸ்லேவ்ஸ் வாதாடுகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பெண்களை கேரள அரசு அனுமதிப்பது இல்லை என்றும், இது கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராகவும், அந்த தீர்ப்புக்கு தடை விதிப்பது போன்று உள்ளது என்றும் கூறினார். எனவே அனைத்து வயது பெண்களும் அங்கு சென்று வழிபட போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வக்கீல் இந்திரா ஜெயசிங் வாதாடுகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்றபோதிலும், கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவது இல்லை என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. அந்த தீர்ப்பு உண்மைதான் என்றபோதிலும் அது இறுதியான தீர்ப்பு அல்ல. ஏனெனில் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை 7 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

அந்த அரசியல் சாசன அமர்வு விரைவில் அமைக்கப்படும். அந்த அமர்வு இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும் வரை நாங்கள் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது.

சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், அனைத்து பெண்களும் அனுமதிக்கப்பட்டால் மகிழ்ச்சிதான்.

அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை. அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் பிரச்சினையில் மக்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருப்பதாக அறிகிறோம். இதை நாங்கள் பூதாகரமாக்க விரும்பவில்லை.

எனவே சபரிமலை கோவிலுக்கு செல்லும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்