ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்க ஜெகன் மோகன் அரசு திட்டம்

ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திட்டமிட்டு உள்ளது.

Update: 2019-12-17 15:21 GMT
அமராவதி,

ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமையும் பகுதி பற்றி முடிவு செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த குழு ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்.  ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைய செய்வதற்காக நாங்கள் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம்.  இதேபோன்று பல தலைநகரங்கள் அமைப்பது பற்றியும் கவனத்தில் கொள்ளப்படும்.

ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பது பற்றியும் நாங்கள் யோசித்து வருகிறோம்.  அவற்றில் ஒன்று சட்டமன்ற தலைநகராகவும், மற்ற இரண்டும் நிர்வாக மற்றும் நீதிமன்ற தலைநகராகவும் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

இதன்படி, விசாப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் மற்றும் கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும் அமையும் என்று சட்டமன்றத்திலேயே முதல் மந்திரி ஜெகன் கூறினார்.  இதனால் 3 பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைவதுடன், சமநிலையிலான வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்