ஜார்கண்ட் முதல் மந்திரி பதவியில் இருந்து ரகுபர் தாஸ் ராஜினாமா

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவை அடுத்து முதல் மந்திரி பதவியில் இருந்து ரகுபர் தாஸ் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2019-12-23 15:49 GMT
ராஞ்சி,

81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் பா.ஜ.க. மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.), காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வந்தது. தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இதனை அடுத்து ஜார்கண்டில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என அறிவதற்கான முடிவை தெரிவிக்கும் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு  தொடங்கியது. தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் ஆளும் பா.ஜ.க. சரிவையே சந்தித்தது.

சட்டசபைக்கான தேர்தலில், சமீபத்திய தகவலின்படி, பா.ஜ.க. 25 தொகுதிகளில் வெற்றி அல்லது முன்னிலை என்ற நிலையில் உள்ளது. அவர்களுக்கு  போட்டியாக உள்ள ஜே.எம்.எம். கூட்டணியானது 40 தொகுதிகளில் வெற்றி பெற கூடிய நிலையில் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் 37 தொகுதிகளை பா.ஜ.க. வென்றிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜாம்ஷெட்பூர் (கிழக்கு) தொகுதியில் பா.ஜ.க. எதிர்ப்பு வேட்பாளர் மற்றும் முன்னாள் மந்திரியான சரயு ராய், ரகுபர் தாசை விட 10 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையில் உள்ளார்.

இதனை தொடர்ந்து ரகுபர் தாஸ் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியை ஒப்பு கொண்டுள்ளார்.  அவர் ராஞ்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, இது பா.ஜ.க.வின் தோல்வி அல்ல. இது என்னுடைய தோல்வி ஆகும் என கூறினார். தொடர்ந்து முதல் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் செய்திகள்