போராட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ; உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் டுவிட்

உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் முதல் மந்திரி அலுவலகம் டுவிட் செய்துள்ளது.

Update: 2019-12-28 07:55 GMT
லக்னோ, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. உத்தர பிரதேசத்திலும் தலைநகர் லக்னோ, மீரட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறைகள் வெடித்தன. பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வன்முறையின் போது  நடந்த துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாகினர். 

போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடந்த மோதலில் இருதரப்பிலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் நிச்சயம் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்று எச்சரித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து சேதங்களுக்கு இழப்பீடாக அபராதம் வசூல் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் இந்த  நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.  

இந்த நிலையில், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: -  யோகி ஆதித்யநாத் அரசின் கடுமையான நடவடிக்கைகளால் அனைவரும் அமைதியாகி உள்ளனர். 

ஒவ்வொரு கலவரக்காரரும், பிரச்சினையை ஏற்படுத்துபவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுச்சொத்தைச் சேதம் செய்வோர் அதற்கான இழப்பீட்டை கொடுக்க வேண்டும் என்று முதல் மந்திரி  கூறியுள்ளார். வன்முறையில் ஈடுபட்டோர் இப்போது கதறுவார்கள், காரணம்  உத்தர பிரதேசத்தில் நடப்பது யோகியின் ஆட்சி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்