சென்னை ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது

சென்னை ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது.

Update: 2019-12-30 07:31 GMT
புதுடெல்லி,

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவருடைய மகள் பாத்திமா லத்தீப். இவர், சென்னை ஐ.ஐ.டி.யில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த நவம்பர் 9-ந் தேதி, அவர் தங்கியிருந்த விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பாத்திமா எழுதிய தற்கொலை குறிப்புகளை அவரது செல்போனில் அவருடைய பெற்றோர் கண்டுபிடித்தனர். அதில், 3 பேராசிரியர்கள் மீது பாத்திமா குற்றம் சாட்டி இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். அந்த கடிதம், பாத்திமா எழுதியதுதான் என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்தனர். இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு தமிழக அரசு மாற்றியது.

இதற்கிடையே, மாணவி பாத்திமா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசை ஐகோர்ட்டு கேட்டுக்கொண்டது.

மேலும், மாணவியின் பெற்றோர் கேரள மாநில எம்.பி.க்களுடன் சேர்ந்து, பிரதமர் மோடியையும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவையும் கடந்த 5-ந் தேதி சந்தித்தனர். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர்.

மத்திய அரசு உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 15-ந் தேதி, இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சி.பி.ஐ.க்கு மாற்றியது. வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. போலீசாரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முறையாக ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை முறைப்படி சி.பி.ஐ. ஏற்றுள்ளது.

கடந்த 27-ந் தேதி அன்று மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் தனியாக வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி தலைமையில் சி.பி.ஐ. போலீசார் நேற்று முதல் பாத்திமா தற்கொலை வழக்கை முறையாக விசாரிக்க தொடங்கினார்கள். பாத்திமா தற்கொலை சம்பவம் நடந்த ஐ.ஐ.டி. விடுதி அறையை பார்வையிட்டனர்.

மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் உள்ளிட்ட அவரது உறவினர்களிடமும், தோழிகளிடமும் சி.பி.ஐ. போலீசார் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். பாத்திமா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது செல்போனில் பதிவு செய்த தகவலில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் 3 பேர் தான் என்று குறிப்பிட்டு இருந்தார். குறிப்பிட்ட அந்த 3 பேராசிரியர்களிடமும் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்