எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு; வதந்தி பரப்பிய கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் வதந்தி பரப்பியதற்காக கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2020-01-19 06:58 GMT
திருவனந்தபுரம்,

தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ந் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

26-ந் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அறிவுறுத்தலின்பேரில் சென்னை மற்றும் பெங்களூருவில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.

அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களுமான அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதோடு, அவர்கள் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 15ந்தேதி அவர்கள் இருவரும் கர்நாடகாவின் உடுப்பியில் அந்த மாநில போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.  களியக்காவிளை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், பின்பு தக்கலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் 20 போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதான தீவிரவாதி அப்துல் சமீம்  மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டாளிகளை கைது செய்ததால் காவல் துறையை பழிவாங்க பயங்கர திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக திருவனந்தபுரம் காங்கிரஸ் பிரமுகர் ஷாகுல் நவாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  இதேபோன்று சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகியோருக்கு உதவிய உசைன் ஷெரீப் என்பவரையும் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்