ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய நடிகை ரோஜா: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

நகரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாக, நடிகை ரோஜா ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டினார்.

Update: 2020-01-19 20:07 GMT
நகரி,

ஆந்திர அரசு சார்பில் 31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, நகரி புத்தூரில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவர் தனது மகனுடன் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றார். அப்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடையே வலியுறுத்தினார்.

குறிப்பாக, சாலையில் வேகத்தை விட, விவேகமே முக்கியம் என உரைத்த ரோஜா, ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் எதிர்பாரா விபத்துகளின்போது உயிர் பிழைக்க முடியும் என்பதை உணர்த்தினார். இதைப்போல காரின் முன் இருக்கையில் அமரும் பயணிகள் மற்றும் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியில் ரோஜாவுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த ஏராளமான தொண்டர்களும் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்