சட்டசபைக்கு ‘வெட்டுக்கிளி’களுடன் வந்த எம்.எல்.ஏ.வால் பரபரப்பு

சட்டசபைக்கு ‘வெட்டுக்கிளி’களுடன் வந்த எம்.எல்.ஏ.வால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-24 21:25 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய பயிர்கள் வெட்டுக்கிளி பூச்சிகள் தாக்குதலினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் 11 மாவட்டங்களில் 3.70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இது கடந்த 26 ஆண்டுகளில் நடந்து இருக்கும் மிகவும் மோசமான பூச்சி தாக்குதல் சம்பவம் ஆகும்.

இந்த நிலையில் ராஜஸ்தானில் சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக பிகானீர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. நோஹா சட்டசபைக்கு சென்றார். அவரது கையில் ஒரு கூடை நிறைய ‘வெட்டுக்கிளி’களை வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்கும்படி அவர் சட்டசபையில் வலியுறுத்தினார். பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மாநில அரசு வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டுகொள்ளவில்லை. மாறாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்