சி.பி.ஐ.யில் வேலை தருவதாக இணையதளங்கள் மூலம் மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சி.பி.ஐ.யில் பயிற்சி அளித்து வேலை தருவதாக இணையதளங்கள் வாயிலாக விளம்பரங்கள் வெளியிட்டு மோசடிகள் நடக்கின்றன. இதை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சி.பி.ஐ. எச்சரித்து உள்ளது.

Update: 2020-01-28 22:30 GMT
புதுடெல்லி,

சட்டம், சைபர் (இணையவழி குற்றங்கள்), தரவு பகுப்பாய்வு, குற்றவியல், மேலாண்மை, பொருளாதாரம், வணிகவியல், தடய அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் படித்த பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி திட்டம் (இன்டர்ன்ஷிப்) ஒன்றை அறிவித்து சி.பி.ஐ. நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சி.பி.ஐ. பயிற்சி அளித்து, வேலையும் தருவதாக இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு மோசடி செய்து பணம் கறப்பதாக சி.பி.ஐ.யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட மோசடியில் இருந்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உஷார்படுத்தி சி.பி.ஐ. சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதையொட்டி சி.பி.ஐ.யின் இணையதளத்தில் கூறி இருப்பதாவது:-

எங்களது பயிற்சி திட்டத்தை சில இணையதளங்கள் குறிப்பிட்டு, இதை சி.பி.ஐ.யின் வேலை வாய்ப்பு என கூறுவதாக எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

இந்த இணையதளங்களில் பயிற்சி காலத்தில் தொகுப்பூதியமாக ஒரு தொகை அல்லது சம்பளம், சி.பி.ஐ. விதிமுறைகளின்கீழ் வழங்கப்படும் என தவறாக குறிப்பிட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி பயிற்சி காலம் முடிந்ததும், சி.பி.ஐ. வேலை வாய்ப்பினை வழங்கும் என்றும் மக்களுக்கு தவறான தகவலை வழங்குகின்றன.

6 முதல் 8 வாரங்களுக்கு சி.பி.ஐ. அளிக்கிற பயிற்சிக்கு எந்த விதமான ஊதியமும் தரப்பட மாட்டாது. பயிற்சி பெற விரும்புபவர்கள் பயிற்சி காலத்தில் தங்குவதற்கு, பயண செலவுகளுக்கு சொந்தமாகத்தான் ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

சி.பி.ஐ.யின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்கிற அல்லது தங்களது இணையதளங்களில் தவறான தகவல்களை வழங்குகிற தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்தவொரு தனி நபரும் செலுத்துகிற தொகைக்கு எந்த வகையிலும் சி.பி.ஐ. பொறுப்பு ஏற்காது.

இதுபோன்ற போலி இணையதளங்களை கையாளும் எவரையும் அல்லது நிறுவனங்களையும், யாரேனும் நாடினால், அது அவர்களது சொந்த பொறுப்புதான்.

இதன்மூலம், அவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படும் எந்த ஒரு இழப்புக்கும், பாதிப்புக்கும் சி.பி.ஐ. பொறுப்பு ஏற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.ஐ.யின் தரைவழி தொலைபேசி எண்ணை பயன்படுத்தி, சி.பி.ஐ. மூத்த அதிகாரிகளின் பெயரை கூறி நடந்துள்ள 3 வெவ்வேறு மோசடிகள் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ததும், மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்