தெலுங்கானா : பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை

தெலுங்கானாவில் சமதா என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-01-31 06:04 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் கொம்பரம் மாவட்டத்தில் உள்ள லிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி 30 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். ஐதராபாத்தில் திஷா என்ற பெண் கொல்லப்பட்டதற்கு 3 நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த பெண் அப்பகுதியில் பாத்திரங்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவருக்கு ‘சமதா’ என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

விசாரணையின் முடிவில் ஷேக் பாபு (30), சேக் மக்தூம் (35), சேக் ஷாபுதீன் (40) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்ட சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை  நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நிதிபதி பிரியதர்ஷினி, இதனை ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்று குறிப்பிட்டதோடு மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சமதா குடும்பத்தினர்  தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்வதற்கு குற்றவாளிகளுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்