உயர்மட்ட அளவில் ஆலோசனை: இடஒதுக்கீடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து, இடஒதுக்கீடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது.

Update: 2020-02-11 00:00 GMT
புதுடெல்லி, 

கடந்த 2012-ம் ஆண்டு, பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் பணியிடங்களை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் நிரப்ப உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அந்த முடிவை உத்தர காண்ட் ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயமில்லை என்றும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பது அடிப்படை உரிமை அல்ல என்றும் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு தொடர்பாக, நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆவேசமாக பேசினர். இடஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டினர்.

மத்திய அரசு அறிக்கை

இந்நிலையில், இதற்கு மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்தது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2012-ம் ஆண்டு, உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் அரசு எடுத்த ஒரு முடிவின் மீது சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இவ்வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கேட்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு அங்கம் அல்ல.

உரிய நடவடிக்கை

இருப்பினும், தீர்ப்பு குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது. இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெளிநடப்பு

இருப்பினும், அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்