டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-02-11 23:45 GMT
புதுடெல்லி, 

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சரத் பவார்

சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்):- தேர்தல் முடிவு, எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. நாட்டில் மாற்றத்துக்கான காற்று வீசுவதை இந்த முடிவு உணர்த்துகிறது. வழக்கம்போல், மத அடிப்படையில் ஓட்டுகளை திரட்ட பா.ஜனதா முயன்றது. ஆனால் தோல்வி அடைந்து விட்டது. பா.ஜனதாவை ஆட்சியை விட்டு இறக்க மாநில கட்சிகள் ஒன்று சேருவது அவசியம்.

சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- பா.ஜனதாவின் வெறுப்பு மற்றும் வன்முறை அரசியலுக்கு டெல்லி மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி:- இந்த முடிவு, பா.ஜனதாவுக்கும், அதன் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கும் எதிரானது.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி):- வெறுப்புணர்வையும், பிரிவினை கொள்கையையும் பரப்பிய பா.ஜனதாவை டெல்லி மக்கள் நிராகரித்துள்ளனர். இதுதான் நாட்டுக்கு உணர்த்தும் செய்தி. ஏழைகள், விவசாயிகள், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

ஷர்மிஸ்தா முகர்ஜி (காங்கிரஸ்):- காங்கிரஸ், சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. மேல்மட்டத்தில் முடிவு எடுப்பதில் தாமதம், மாநில அளவில் ஒற்றுமையின்மை, கீழ்மட்டத்தில் தொடர்பு இல்லாமை, தொண்டர்கள் ஆர்வம் இல்லாமை ஆகியவையே காங்கிரசின் தோல்விக்கு காரணங்கள். இதற்கு நானும் பொறுப்புதான்.

பி.கே.டெப் (பிஜூ ஜனதாதள செய்தி தொடர்பாளர்):- மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தேசிய கட்சிகள் தவறி விட்டன. எனவே பொதுமக்கள் மாநில கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். வரவிருக்கும் நாட்களில் அரசியலில் மாநில கட்சிகள் வளர்ச்சி அடையும்.

மேலும் செய்திகள்