சிலிண்டர் விலை உயர்வு: டெல்லியில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-02-13 09:46 GMT
புதுடெல்லி,

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு 14.2 கிலோ எடையிலும், ஓட்டல்கள் மற்றும் இதர வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை கொண்டு செல்ல சிரமமான மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானிய விலையில் விற்பனை செய்யப்படும். அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர் களை மானியம் இல்லாமல் தான் பெற முடியும்.

சர்வதேச சந்தையில் நிகழும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருவது போன்று, மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த மாதத்துக்கான(பிப்ரவரி) வர்த்தக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 1-ந்தேதி மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக ரூ.147 உயர்த்தியுள்ளன. 

நேற்று முதல் விலை உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள எரிவாயு சிலிண்டர், டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.144.5 உயர்த்தப்பட்டு ரூ.858.5 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு ரூ.896 ஆகவும், மும்பையில் ரூ.145 உயர்த்தப்பட்டு ரூ.829.5 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு ரூ.881 ஆகவும் உள்ளது.

இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து  டெல்லியில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மகிளா காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ் மற்றும் அல்கா லம்பா உள்ளிட்ட அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். 

விலை உயர்வு விகிதம் பட்டியலிடப்பட்ட சிலிண்டர் படம் அச்சிடப்பட்ட அட்டையை ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

டெல்லியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துக்கு வெளியே  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்