ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது - சக்திகாந்த தாஸ்

இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்துகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-19 10:37 GMT
புதுடெல்லி,

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-

அரசு நிர்ணயித்துள்ள நிதி பற்றாக்குறை இலக்கை எட்டமுடியுமா? என சந்தேகப்பட வேண்டியதில்லை, 3 புள்ளி 5 சதவீதமாக நிதிப் பற்றாக்குறை எட்ட முடிந்த இலக்குதான்.

பட்ஜெட் மேலாண்மை மற்றும் நிதி பொறுப்பு (எஃப்ஆர்பிஎம்) குறித்த விஷயத்தில் அரசு உறுதியாக உள்ளது. எட்டக்கூடிய இலக்கையே அரசு நிர்ணயித்துள்ளது. பட்ஜெட் மேலாண்மை மற்றும் நிதிப் பொறுப்பு குழு வரையறுத்த அளவீட்டின்படி தான் நிதிநிர்வாகத்தை அரசு செயல்படுத்துகிறது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பட்ஜெட்டில் ஜிடிபி வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறுகிய காலத்தில் எட்டக்கூடிய வகையில் உள்ளன. தனிநபர் வரி விதிப்பில் சலுகை, வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் அதிகரிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது, கட்டமைப்பு திட்டப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் உற்பத்தித்துறை, மின்னணு மற்றும் ஜவுளி தொழில் முன்னேற்றத்துக்கு தேவையான வழிமுறைகள் பட்ஜெட்டில் காணப்பட்டுள்ளன.  ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 3 புள்ளி 8 சதவீத அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் இது 3.3 சதவீத அளவுக்கு கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்