ரஞ்சன் கோகாய்க்கு எம்.பி பதவி மார்க்கண்டேய கட்ஜூ கடும் விமர்சனம்

ரஞ்சன் கோகாயிடம் இல்லாத தீய குணங்கள் எதுவுமில்லை என சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ விமர்சித்து உள்ளார்.

Update: 2020-03-20 08:45 GMT
புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட்டின்  தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அவரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக இருந்த மூத்த வழக்கறிஞர் ஓய்வு பெற்றதை அடுத்து காலியான இடத்திற்கு  ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டார்.இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

அயோத்தி பிரச்சனை, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய இவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  ரஞ்சன் கோகாய் நியமன எம்.பியாக நியமிக்கபடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்த நிலையில்,  மாநிலங்களவை எம்.பியாக  ரஞ்சன் கோகாய் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ரஞ்சன் கோகாய் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. 

ரஞ்சன் கோகாய் நியமனம் குறித்து  ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கருத்துத் தெரிவித்துள்ளார்.டுவிட்டர் பக்கத்தில்   அவர் கூறி இருப்பதாவது:-

 "நான் 20 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 20 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறேன். இந்த நீண்ட அனுபவத்தில்  பல நல்ல நீதிபதிகளையும் பல மோசமான நீதிபதிகளையும் நான் அறிந்திருக்கிறேன்.  ஆனால் இந்திய நீதித்துறையில்  இந்த பாலியல் வக்கிரமான ரஞ்சன் கோகோய் போல வெட்கமற்ற மற்றும் அவமானகரமானவர் போன்று நான் ஒருபோதும் அறிந்ததில்லை.  இவரிடம் இல்லாத தீய குணங்கள்  எதுவுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்