திவாலாகும் நிலையில் விமான நிறுவனங்கள்: அரசின் ஆதரவு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்

திவாலின் விளிம்பு நிலையில் விமான நிறுவனங்கள் இருப்பதாக கூறி, அரசின் உதவியை நாடி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் கடிதம் எழுதி உள்ளது.

Update: 2020-04-03 20:20 GMT
புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கத்துடன் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு வெளிநாடுகளும் தடை விதித்து உள்ளன. இதன் காரணமாக எல்லா விதமான பயணிகள் போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அனைத்து விமானங்களும் உள்நாட்டு சேவைகளையும், வெளிநாட்டு சேவைகளையும் ரத்து செய்துள்ளன. இதனால் விமானங்கள் பறக்க வழியின்றி, தரையில் நிற்கின்றன. விமான நிறுவனங்களின் நிதி நிலைமை கவலைக்கிடம் தருவதாக அமைந்துள்ளது.

இதை சுட்டிக்காட்டி, அரசின் உதவியைக் கோரி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரிக்கும் இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் ‘பிக்கி’யின் விமான குழு தலைவர் ஆனந்த் ஸ்டான்லி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக விமானங்கள் இயங்காமல், விமான தொழில் முடங்கி உள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் கையிருப்பு நிதி கரையத்தொடங்கி இருக்கிறது. இது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. பல விமான நிறுவனங்கள் திவாலின் விளிம்பில் இருக்கின்றன.

எரிபொருளுக்கான கட்டணங்களை, அவற்றை சந்தையிடும் எண்ணெய் நிறுவனங்களுக்கு விமான நிறுவனங்கள் வட்டியின்றி கட்டுவதற்கான கால வரம்பு 21 நாட்களாக இருக்கின்றன.

இந்த 21 நாள் கால வரம்பை 180 நாட்களாக உயர்த்தினால் விமான நிறுவனங்களின் பணப்புழக்க நிலை பலன் அடையத்தக்க விதத்தில் இருக்கும்.

புதிய டிக்கெட்டுகளை பதிவு செய்வதை விட, பதிவுகளை ரத்து செய்வது அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய சரக்கு, சேவை வரியை விட, டிக்கெட்டுகளை ரத்து செய்வதால் திரும்ப செலுத்த வேண்டிய சரக்கு, சேவை வரி அதிகமாக இருக்கிறது. எனவே விமான போக்குவரத்து துறை சரக்கு, சேவை வரி செலுத்த வேண்டியதை ஒத்தி போட வேண்டும்.

விமான எரிபொருள் விற்பனையை சரக்கு, சேவை வரியின் கீழ் கொண்டு வர வேண்டும். விமானங்களை இயக்குவதற்கான செலவில் 40 சதவீதம் எரிபொருள் வகைக்கு செலவிடப்படுகிற நிலை உள்ளது.

விமான நிறுவனங்கள் எரி பொருளுக்காக செலுத்துகிற சரக்கு, சேவை வரியில் இருந்து உள்கடன் பெறுவதற்கு விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது, விமானங்களின் செயல்பாட்டு செலவு குறையும்.

விமானங்களை நிறுத்துவதற்கும், தரை இறங்குவதற்கும் விமான நிலையங்களுக்கு விமான நிறுவனங்கள் கட்டணம் வழங்குவதையும், ஆதாய உரிமை (ராயல்டி) வழங்குவதையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பயணிகளுக்கு விற்கப்பட்ட ஆனால் பயன்படுத்தப்படாத டிக்கெட்டுகளுக்கு, 35 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 59 ஆயிரம் கோடி) தொகையை விமான நிறுவனங்கள் திருப்பி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கூறுகிறது.

மேலும் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் விமான நிறுவனங்கள் கையிருப்பில் 61 பில்லியன் டாலரை (சுமார் ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 400 கோடி) கரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்