இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கலாம் : அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்

இந்தியாவில் ஊரடங்கு செப்டம்பர் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-04-04 05:12 GMT
புதுடெல்லி,

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில்  முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்,  தற்போது உலகம் முழுவதும் சுமார் 203 நாடுகளில் வியாபித்துள்ளது. கொரோனா வைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவை விட ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக பரவுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக பரவுவது கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. 

ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டுத்தீ போல பரவுகிறது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில்   277,161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,392 ஆக உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது.  இதன்படி, வரும் 14 ஆம் தேதி ஊரடங்கு நீடிக்கும்.  ஆனால், இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? அல்லது முழுமையாக நீக்கப்படுமா? அல்லது பகுதியா நீக்கப்படுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துவருகின்றன.

இந்தநிலையில், அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் நிறுவனம், ‘இந்தியாவில் நாடு தழுவிய அளவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில்தான் நீக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்திய சுகாதாரத்துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் எந்த திட்டமும் தற்போதைக்கு இல்லை என கேபினட் செயலர் ராஜீவ் கவுபா தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்