அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்ற வேண்டும்; மத்திய அரசு

கொரோனா பாதிப்பு குறைய 5 முதல் 6 வாரங்கள் வரை ஆகும் என்று சர்வதேச அனுபவங்கள் பரிந்துரைக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-04-10 10:54 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.  இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,412 ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது.  

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 17 நாட்கள் ஆகியுள்ள போதிலும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதனால், 14 ஆம்  அதேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது கட்டுப்பட்டுகளுடன் தளர்த்தப்படுமா? என்பது நாட்டு மக்களின் எதிர்ப்பாக உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறையாததால், ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தன் கூறுகையில், “ கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த இன்னும் 3 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.  ஊரடங்கு என்பது சமூக ரிதியான தடுப்பு மருந்து போன்றது.

அனைத்து மாநில அரசுகளும்  ஊரடங்கை முழுமையாக பின்பற்ற வேண்டும்.  சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. ஆனால், ஊரடங்கின் மூன்றாவது வாரத்தில் நாம் உள்ளோம். கொரோனா பாதிப்பு  குறைய 5 முதல் 6 வாரங்கள் தேவை என்று சர்வதேச அனுபவங்கள் பரிந்துரைக்கிறது” என்றார். இதனால், ஊரடங்கு மேலும்  சில வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. 

மேலும் செய்திகள்