40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலை போன்ற மற்றொரு தாக்குதல் முறியடிப்பு

40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலை போன்ற மற்றொரு பயங்கர தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-05-28 06:13 GMT
புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வருடம் பிப்ரவரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.  20 வீரர்கள் காயமடைந்தனர்.  ஸ்கார்பியோ கார் ஒன்றில் நிரப்பப்பட்ட 350 கிலோவுக்கு கூடுதலான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இந்த தாக்குதலை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.

இதேபோன்ற மற்றொரு பயங்கரவாத தாக்குதல் இன்று முறியடிக்கப்பட்டு உள்ளது.  தெற்கு காஷ்மீரின் ராஜ்போரா நகரில் அவிந்த்குந்து என்ற பகுதியில் சான்டிரோ கார் ஒன்று நின்றுள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து ராஷ்டீரிய ரைபிள் படை, சி.ஆர்.பி.எப். மற்றும் புல்வாமா போலீசார் என 44 வீரர்கள் அடங்கிய கூட்டு குழுவினர் காரை சோதனையிட்டனர்.  இதில், காரில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது.  கடந்த 4 நாட்களுக்கு முன் கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த காரில் இருந்த எண்ணானது, ஸ்கூட்டர் ஒன்றின் எண் என்றும், காரை வீரர்கள் நெருங்கியபொழுது, அதில் இருந்த பயங்கரவாதி தப்பி ஓடி விட்டான் என கூறப்படுகிறது.

இதனால், 40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதலை போன்ற மற்றொரு அதிபயங்கர தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் புல்வாமாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.

மேலும் செய்திகள்