இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 14 பேர் சுட்டுக் கொலை

இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஊடுருவச் செய்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Update: 2020-06-02 04:53 GMT
புதுடெல்லி

ஜம்மு காஷ்மீரில் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 14 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த 28 ஆம் தேதியில் இருந்து ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷரா பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வழியாக, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் காணப்பட்ட பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதேபோல், மெந்தர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின அவந்திபோராவில் இன்று  டிராலின் சைமோ பகுதியில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சோயிமோ கிராமத்தில் பாதுகாப்பு படை மற்றும் போலீசார்  இணைந்து நடத்திய வேட்டையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அங்கு தொடர்ந்து  இன்னும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.டிராலில் சனிக்கிழமை முதல் இது மூன்றாவது துப்பாக்கி சூடு சமபவமாகும்.

கொரோனா வைரஸ் பரவலின் மறைவில் ஏராளமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஊடுருவச் செய்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்