மேற்கு வங்காளத்தில் அழுகிய உடல்களை வேனில் ஏற்றும் வீடியோவால் புதிய சர்ச்சை

மேற்கு வங்காளத்தில் அழுகிய நிலையில் இருந்த உடல்களை வேனில் எடுத்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-06-14 03:11 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆளும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், கடந்த ஆண்டு பதவியேற்று கொண்ட மேற்கு வங்காள கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் இடையே நீண்ட காலத்திற்கு மோதல் போக்கு காணப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில், கொல்கத்தா மாநகர சுகாதார துறை ஊழியர்கள் அழுகிய நிலையில் இருந்த உடல்களை சுமந்து சென்று வேனில் ஏற்றியுள்ளனர்.  பின்னர் அவை தகனம் செய்யப்படுவதற்காக எடுத்து செல்லப்பட்டு உள்ளன.  இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதுடன், அவை கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் உடல்கள் என்ற தகவல் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபற்றி கவர்னர் தங்கர், விவரிக்க முடியாத இருதயமற்ற, உணர்வற்ற செயல்கள் என வருத்தமுடன் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.  இதனை தொடர்ந்து மாநில உள்துறை மற்றும் கொல்கத்தா மாநகராட்சி ஆணையாளரிடம் இதற்கு விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளார்.

எனினும், அதிகாரிகள் மற்றும் கொல்கத்தா நகர போலீசார், வீடியோ போலியானது என்று கூறியதுடன், அரசு மருத்துவமனைகளில் அநாதையாக கிடந்த உடல்கள் அவை என்றும், அவற்றுக்கும் கொரோனா பாதிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதனால், மேற்கு வங்காள அரசுக்கும், கவர்னர் தங்கருக்கும் இடையே மீண்டும் கசப்புணர்வு தோன்றியுள்ளது.  கவர்னர் போலியான செய்திகளை பரப்பி வருகிறார் என்று மேற்கு வங்காள அரசு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்