சீன எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்த மத்திய அரசு திட்டம் எனத்தகவல்

சீனாவின் அத்துமீறலுக்கு இடம் கொடுக்காத வகையில் அந்நாட்டுடனான எல்லைப் பகுதியில் கூடுதல் படைகளை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2020-06-25 17:37 GMT
புதுடெல்லி,

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி இரவில் இந்தியாசீனா வீரர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இருதரப்பு வீரர்களும் கற்கள், கம்பிகள் மூலம் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.சீனா தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் காரணமாக இந்திய-சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா படைகளை குவித்தது. அதேசமயம் எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொண்டன. அதன்படி இரு நாடுகளுக்கிடையே ராணுவ ரீதியில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.

கடந்த திங்கட்கிழமை லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது.அதன்படி லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.லடாக் மோதல் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதாக அமைந்தது.

இந்த நிலையில், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்திய ராணுவம் மட்டுமல்லாமல் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையும் பணியில் அமர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் செய்திகள்