திருவனந்தபுரத்தில் மும்மடங்கு ஊரடங்கு - பினராயி விஜயன்

திருவனந்தபுரம் நகரப் பகுதியில் மும்மடங்கு ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-06 17:43 GMT
திருவனந்தபுரம்,

சீனாவின் உகான் நகரில் கடந்த வருட இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலாக இந்தியாவில் கேரளாவில் கண்டறியப்பட்டது.  சீனாவில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  இதன்பின் சிகிச்சையில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்பின்னர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.  நாட்டில் இன்று வரை 6.97 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  19,701 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 522 ஆக உயர்ந்து உள்ளது.  இதேபோன்று 2,252 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

மேலும் தமிழ்நாட்டுடன் சேர்ந்த மாவட்டம் என்பதால் தமிழ்நாட்டில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வியாபாரத்திற்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் வந்து செல்கின்றனர். எனவே இவர்களுக்கு நோய் பரவினால் அது மேலும் பல பகுதிகளுக்கு பரவ வாய்ப்புள்ளது. இதனால் திருவனந்தபுரம் நகரப் பகுதியில் 6-ம்க் தேதி  முதல் மும்மடங்கு ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.  கேரள எல்லைகளில் பரிசோதனைகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்