மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8,641 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 8,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-07-16 15:04 GMT
புனே,

நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன.

இதனால், மராட்டியத்தின் புனே மாவட்டத்துக்கு உட்பட்ட 22 கிராமங்கள், பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடந்த 13ந்தேதி முதல் வருகிற 23ந்தேதி வரை 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  இதேபோன்று தானேவிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.  கொரோனா பாதிப்புகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மராட்டிய சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 266 பேர் உயிரிழந்தனர்.  இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துள்ளது.  இதேபோன்று 8,641 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது.  இவற்றில் மும்பையில் மிக அதிக அளவாக 97,950 பேருக்கு பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.  5,527 பேர் இன்று குணமடைந்தனர்.  இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ளது.  

மராட்டியத்தில் குணமடைந்தோர் விகிதம் 55.63 சதவீதம் ஆக உள்ளது.  தொடர்ந்து, 1 லட்சத்து 14 ஆயிரத்து 648 பேர் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.  மராட்டியத்தில் இதுவரை 7,10,394 பேர் வீட்டிலும், 42,833 பேர் பிற மையங்களிலும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்