விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 11 தொழிலாளர்கள் பலி

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-08-01 23:18 GMT
விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த கப்பல் கட்டும் தளம் 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இங்கு 70 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்கள் மாற்றம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த கிரேன் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இதற்கிடையே சமீபத்தில் புதிதாக கப்பல் கட்டும் பணிக்காக 3 ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து ராட்சத கிரேனை சோதனை முறையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று ராட்சத கிரேனை இயக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து பலத்த சத்தத்துடன் கீழே நின்றுகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. கிரேன் விழுந்த சத்தம் பலத்த வெடி சத்தம் போல சில கி.மீ தூரத்திற்கு கேட்டது.

இந்த பயங்கர விபத்தில் 11 தொழிலாளர்கள் கிரேனில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் கப்பல் கட்டும் நிறுவன ஊழியர்கள். 7 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள். உயிரிழந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர், விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டனர்.

இதற்கிடையே விபத்து குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த குழுவில் என்ஜினீயர்கள், கட்டிட வல்லுனர்கள் இடம்பெற்று இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்