ஆந்திராவில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் திடீர் தீ விபத்து; 7 பேர் பலி

ஆந்திராவில் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-08-09 03:37 GMT
விஜயவாடா,

ஆந்திர பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு இதுவரை 1,842 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருத்துவமனைகள் இல்லாத சூழல் காணப்படுகிறது.  இதனால், படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளை அமைத்து அங்கிருக்கும் ஓட்டல்கள், மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதேபோன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்காகவும் சில ஓட்டல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விஜயவாடா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை ஒன்று பயன்படுத்தி வந்தது.  அந்த மருத்துவமனையில் திடீரென இன்று காலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதில், 22 பேர் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.  அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றும் பணியும் நடந்தது.  மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது.  எனினும் இதுபற்றிய தீவிர விசாரணைக்கு பின்னரே முழு விவரமும் தெரியவரும் என கூறப்படுகிறது.

தீ விபத்து பற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்