கொரோனா மரணங்களால் விரக்தி; விஷ ஊசி போட்டு கணவன்,குழந்தைகளை கொலை, பெண் டாக்டர் தற்கொலை

நாய்க்கு போடும் விஷ ஊசியை போட்டு கணவன், இரு குழந்தைகளை கொன்று பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2020-08-20 16:28 GMT
நாக்பூர்

மராட்டிய மாநிலம் நாக்பூரை அடுத்த ஓம் நகர் பகுதியில் பிரபல கல்லூரியின் விரிவுரையாளர் டிராஜ் ரானே (42), அவரது மனைவியான டாக்டர் சுஷ்மா (40) மற்றும் அவர்களது 11 வயது மகன் துருவ், ஐந்து வயது மகள் வான்யா, டிராஜ் ரானேயின் வளர்ப்பு தாய் பிரமிளா ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று காலை 8 மணியாகியும் வீட்டில் யாரும் எழுந்திருக்கவில்லை. 

பக்கத்து வீட்டு மூதாட்டி பிரமிளா  பார்த்த போது, 4 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து, இறந்து கிடந்த 4 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து நாக்பூர் போலீஸ் துணை கமிஷனர் நீலத்பால் கூறியதாவது: டிராஜ் ரானே மற்றும் இரண்டு குழந்தைகளும் ஒரு அறையில் படுக்கையில் இறந்து கிடந்தனர். சுஷ்மா அருகிலுள்ள அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு சடலமாக காணப்பட்டார். 3 பேர் இறந்து கிடந்த படுக்கையில் ஒரு ‘சிரிஞ்’ மற்றும் தற்கொலைக் குறிப்பு கடிதம் இருந்தது. 

சுஷ்மா தனது மகளுடன் அதிகாலை 5.30 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார். அங்கு ஒரு சிரிஞ் மற்றும் மயக்க மருந்து ஆகியவற்றை வாங்கி வந்துள்ளார். மருத்துவமனையில் இருந்த செவிலியரிடம், வீட்டின் வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருப்பதால், அந்த நாய்க்கு மயக்க மருந்து தேவை என்று கேட்டு வாங்கியுள்ளார்.  அவர்களும், சுஷ்மா ஒரு டாக்டர் என்பதால் வீரியமிக்க மயக்க மருந்தை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்த சுஷ்மா, தூங்கிக் கொண்டிருந்த கணவன், மகன் ஆகியோருக்கு விஷ ஊசி போட்டுள்ளார். பின்னர், தனது மகளுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார். 

மூவரும் இறந்த பின்னர், சுஷ்மா தனது இரு குழந்தைகளின் கைகளில், இரண்டு வெள்ளை நிற பூக்களை வைத்துள்ளார். அவை, குழந்தைகள் மீதான அன்பின் அடையாளமாக இருக்கலாம். சுஷ்மா எழுதி வைத்துள்ள தற்கொலைக் குறிப்பு கடிதத்தில், ‘தினமும் கொரோனா மரணங்களை பார்க்க முடியவில்லை; அதனால் நாங்கள் அனைவரும் மரணத்தைத் தழுவுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். டிராஜ் ரானேவும், சுஷ்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவார்கள்.

மேலும் செய்திகள்