விநாயகர் சதுர்த்தி திருவிழா; வடமாநில கோயில்களில் பக்தர்களின்றி தீப ஆராதனையுடன் வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநில கோயில்களில் பக்தர்கள் இன்றி தீப ஆராதனையுடன் வழிபாடு நடந்தது.

Update: 2020-08-22 05:07 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  நாட்டில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் பெருமளவில் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநில கோயில்களில் பக்தர்கள் இன்றி தீப ஆராதனையுடன் வழிபாடு நடந்தது.  மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலும் விநாயகருக்கு தீபமேற்றி வழிபாடு நடைபெற்றது.  இதில் பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.  இதேபோன்று புனே நகரில் உள்ள ஸ்ரீமந்த் தக்துசேத் ஆல்வாய் கணபதி ஆலயத்தில் பக்தர்கள் இன்றி விநாயகருக்கு தீப ஆராதனை காட்டப்பட்டு பூஜை நடைபெற்றது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஸ்ரீகணேஷ் ஆலயத்தில் விநாயகருக்கு காலையிலேயே தீப ஆராதனை காட்டப்பட்டது.  தொடர்ந்து பூஜையும் நடைபெற்றது.  இதில் ஒரு சில பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் கன்னாட் பகுதியில் உள்ள கணபதி ஆலயத்தில் அர்ச்சகர்கள் ஹோமம் வளர்த்து பூஜை செய்தனர்.  வேத மந்திரங்களும் உச்சரிக்கப்பட்டன.  இதில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி ஒரு சில பக்தர்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று, டெல்லியின் துவாரகா பகுதியில் அமைந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்த விநாயகருக்கு ஆரத்தியுடன் கூடிய வழிபாடு நடைபெற்றது.  இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

மேலும் செய்திகள்