உலகில் அதிக அளவாக இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் 20 லட்சம் கொரோனா பாதிப்புகள்

உலகில் அதிக அளவாக ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா 20 லட்சம் கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து உள்ளது.

Update: 2020-09-01 12:31 GMT
புதுடெல்லி: 

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடத ஒருமாதத்தில் 31 நாள் காலத்தில் நாட்டில் சுமார் 28,000 பேர் இறந்தனர். இது உலகிலேயே அதிகமாகும்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி கொரோனா பாதிப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 36,91,166 பாதிப்புகள் உள்ளன, பிரேசிலில் 39,08,272 பாதிப்புகளும் உள்ளன,  அமெரிக்கா 60,31,013 ஆக இரு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில், ஜூலை 31 அன்று மொத்த எண்ணிக்கை 16,38,870 ஆக இருந்தது, ஆகஸ்ட் இறுதிக்குள் 36 லட்சத்திற்கும் அதிகமாகி உள்ளது.

"சராசரி தினசரி மீட்கப்பட்ட பாதிப்புகள் (வார வாரியாக) ஜூலை முதல் வாரத்தில் 15,000 இலிருந்து ஆகஸ்ட் கடைசி வாரத்தில் 61,700 ஆக 4 மடங்கு அதிகரித்துள்ளன" இந்தியாவின் மீட்பு விகிதம் கிட்டத்தட்ட 77 சதவீதமாக இருப்பது ஊக்கமளிக்கிறது. 2 சதவீத இறப்பு விகிதமும் தொடர்ந்து குறைவாகவே உள்ளது.

பல கிராமப்புறங்களிலும் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது என்ற கவலையின் மத்தியில் சோதனை விரிவாக்கப்பட்டதால் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டது. திங்களன்று, 10.16 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை 4.33 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியா ஒரு நாளைக்கு சராசரியாக 64,000 பாதிப்புகளை கண்டது. ஜூலை மாத சராசரி பாதிப்புகளை விட இது84 சதவீதம் உயர்வு என்று பிபிசி உத்தியோகபூர்வ தரவுகளை மேற்கோளிட்டு கூறி உள்ளது. "இந்த எண்ணிக்கை உலகிலேயே மிக உயர்ந்தது - எடுத்துக்காட்டாக, அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை  கொண்ட அமெரிக்கா, கடந்த மாதம் சராசரியாக 47,000 பாதிப்புகளை பதிவு செய்து உள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்தாமல் ஊரடங்கு தளர்வுகளை அளிப்பது "பேரழிவுக்கான செய்முறையாக" இருக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தபோதும், செப்டம்பர் முதல், இந்திய அரசு பொருளாதார நிலையை புதுப்பிக்கும் முயற்சியில் மேலும் பல கட்டுப்பாடுகளை நீக்கியது.

ஆகஸ்ட் 31 அன்று, நிதியாண்டு 21 இன் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் ஆண்டுக்கு மிக மோசமான சரிவாக 23.9 சதவீதமாக  ஆக சுருங்கிவிட்டன. அமெரிக்க பொருளாதாரம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 9.1 சதவீதமாக சுருக்கியது, அதே நேரத்தில் சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது.

மேலும் செய்திகள்